சேரும் சகதியமாக மாறியதால் மக்கள் பள்ளியில் தங்க வைப்பு
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, சீதாபுரம் ஊராட்சி. இப்பகுதியில், 15 இருளர் குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள், சீதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே குடிசை கட்டி, 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது, பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, தெரு மற்றும் குடிசை வீடுகள், மழை நீரால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி பாஸ்கர் ராவ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அச்சிறுபாக்கம் மருத்துவ குழுவினர், அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினர்.இதுகுறித்து அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், 'சீதாபுரம் பகுதி இருளர் மக்களுக்கு, வடகிழக்கு பருவமழை முடிந்த பின், அப்பகுதியில் ஆய்வு செய்து, நிரந்தர பட்டா வழங்கவும், மத்திய மற்றும் மாநில அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை தரப்படும்' என்றார்.