வியாபாரிகள் வராததால் விவசாயிகளே கரும்பை அறுவடை செய்து விற்பனை
கரும்பை அறுவடை செய்த விவசாயிகள்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு கிணற்று நீர் பாசனத்தை பயன்படுத்தி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்புகளை பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்ய வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்ககிரி வட்டம் கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், தேவூர், குள்ளம்பட்டி, பொன்னம்பாளையம், நல்லாங்கியூர், மேட்டுப்பாளையம், மோட்டூர் உள்ளிட்டபகுதிகளில் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்புகளை இந்த ஆண்டு நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டை விட அதிகளவில் விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். அண்மையில் தமிழகரசு நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பில் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கரும்புகளை கூட்டுறவு அதிகாரிகள் வாங்கிச்செல்வார்கள் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் இருந்த கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்ப்டடுள்ளது.
வழக்கம் போல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம் தற்போது அனைத்து பகுதிகளிலும் கரும்பு அதிகமாக பயிரிடப்பட்டுள்ளதால் இப்பகுதிக்கு வியாபாரிகள் வரவில்லை என விவாசயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து வந்த ஒரு சில வியாபாரிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான விலைக்கு கரும்புகளை கேட்டதால் பொங்கல் திருநாளுக்கு ஒரே நாள் உள்ள நிலையில் விவசாயிகளே கூலி ஆள்களை வைத்து கரும்புகளை வெட்டி மினி ஆட்டோவில் ஈரோடு, சேலம், சங்ககிரி, பவானி, எடப்பாடி உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் உள்ள நகர் பகுதிகளுக்கு கொண்டு விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு விவசாயிகள் நேரடி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் கரும்புகள் உரிய விலைக்கு விற்பனையானல் தான் விவாசயிகளின் வீட்டின் பொங்கல் இனிக்கும் நிலை உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். .