சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பொன்னமராவதி அருகே சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவ சித்தர் பீடம் ஸ்ரீம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிபட்டியில் அமைந்திருக்கும் சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவ சித்தர் பீடம், ஸ்ரீம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து முதற்காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என யாகசாலையில் கணபதி ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு யாகவேள்வி பூஜைகள் யாகசாலையில் நான்கு கால பூஜைகளாக தேனிமலை ராஜப்பா குருக்கள் தலைமையில் நடைபெற்றன. பின்பு பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை பல்வேறு கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பூஜித்தனர். அவ்வாறு பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கல இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். கருடபகவான் கோபுர கலசத்தின் உச்சியில் வட்டமிட சிவபுரம் ஸ்ரீ அகத்தியர் சிவ சித்தர்பீடம் அருள்மிகு ஸ்ரீ மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு சிவபுரம் ஞானகுரு வையகத்தின் வழிகாட்டி வாழும் அகத்தியர் மகான் ஸ்ரீம் சிவசித்தர் அய்யா அவர்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்வை காண சென்னை, கோவை, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பொன்னமராவதி, வெள்ளையாண்டிபட்டி, கொப்பனாப்பட்டி, காட்டுப்பட்டி, கொன்னையூர், உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிசேகவிழா ஏற்பாடுகளை சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவ சித்தர் பீடத்தின் அறங்காவலர் ராமன்ஜி செய்திருந்தார். மேலும் கும்பாபிஷேக விழாவில் பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழா நிகழ்வினை பட்டிமன்ற நடுவர் தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் அவர்களும் உதவிப்பேராசிரியரும் தினத்தந்தி செய்தியாளருமான கீரவாணி அழகு இளையராஜா ஆகியோரும் நேர்முக வர்ணனை செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.