ரெயிலிலிருந்து தவறி விழுந்து அசாம் வாலிபர் பலி

ரெயிலிலிருந்து தவறி விழுந்து அசாம் வாலிபர் பலி

பைல் படம்

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்டு விட்டு கேரளாவுக்கு திரும்பிய போது சோகம்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே தொட்டம்பட்டி ரெயில்வே நிலையத்திற்கு சற்று தொலைவில் நேற்று முன்தினம் காலை தண்டவாளத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அசாம் மாநிலம் தமுல்பூர் அருகேயுள்ள பக்ரிபாரி கம்பரி பகுதியை சேர்ந்த கமல்சோரன் (வயது 28) எனத்தெரியவந்தது. கமல்சோரன் கேரளா மாநிலம் கோட்டயத்தில் தனது அண்ணன் சிமோன்சோரன் என்பவருடன் சேர்ந்து வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அசாமிற்கு வாக்களிக்க சென்று உள்ளார். அங்கு வாக்களித்த பிறகு சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கவுகாத்தியில் இருந்து ஏறி கோட்டயத்திற்கு புறப்பட்டு வந்தார்.

முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த கமல்சோரன் தொட்டம்பட்டி பகுதியில் ரெயில் வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்து வந்தார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து அவர் இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பலியான கமல் சோரனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அவரது உறவினருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story