பெண் மீது தாக்குதல் : 5 பேர் மீது வழக்கு
குளச்சலில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாடு, கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் ராணி (38) இவர் அங்குள்ள அலெக்ஸ் தேவாலயத்தில் செயலாளராக பொறுப்பில் உள்ளார். அதே ஆலயத்தில் பொருளாளராக அதே பகுதியை சேர்ந்த அருள் சீலி என்பவர் உள்ளார். இந்த நிலையில் ஜெர்லின் ராணி அன்பிய ஒருங்கிணைப்புக்குழு இணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கும் அருள் சீலிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஜெர்லின் ராணி வீட்டின் முன் உள்ள அவரது கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அருள் சீலி மற்றும் அவரது உறவினர்கள் ஏசுதாஸ், சுசீலா, அந்தோணி பிச்சை, அமல்ஜோதி ஆகியோர் சேர்ந்து ஜெர்லின் ராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story