வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

ஆட்சியர் ஆய்வு 

நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவங்கியது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன்படி வாக்குப்பதிவு மையங்களை தயார் செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை சீரற்ற மயமாக்கல் உள்ளிட்ட பணிகளை முடித்தல் உள்பட பல்வேறு பணிகள் நிறைவு பெற்று விட்டன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நோட்டாவுக்காக கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் அதிகாரிகளுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டது. எனவே ஈரோடு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், மற்றும் சின்னங்கள் பொருத்து மணி இன்று தொடங்கியது. நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவுசிக் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் திறந்து பணிகள் தொடங்கப்பட்டது.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- ஒட்டு மொத்தமாக நீலகிரி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1619 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் 7942 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.இந்த பணிகளை நாளை (வெள்ளிக்கிழமை) முடிக்க திட்டமிடபட்டுள்ளது.. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பது உள்பட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. என்றனர். முன்னதாக வேட்பாளர் பெயர் சின்னங்கள் பொருத்திய போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story