திருச்சி விமான நிலையத்தில் ரூ. 87 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 87 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்-2 பயணிகளிடம் விசாரணை.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். அப்போது மலேசியாவைச் சேர்ந்த பெண் பயணியொருவர், அவரது கைப்பையில் சுமார் 1 கிலோ முற்றுப்பெறாத நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றுக்கான ஆவணங்களோ உரிய அனுமதியோ அந்த பயணியிடமில்லை. இதையடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வணிக நோக்கில் நகைகள் முறைகேடாக கொண்டு வந்திருந்தால் நகையை கொடுத்தனுப்பிய நபர்களை அடையளம் காட்டவும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக நடந்த தொடர் விசாரணையில், பயணி திட்டமிட்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்து பயணியையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 60.95 லட்சமாகும். அதேபோல். சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வந்தடைந்தது. சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைக்குள்ளாக்கியதில், அதில் வந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பயணியொருவர் 330 கிராம் பசைவடிவிலான தங்கத்தையும், 80 கிராம் தங்க சங்கிலியையும் தனது உடைமைகளுக்குள் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 26.62 லட்சமாகும். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story