நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை: ஆட்சியரிடம் நேரில் புகார்
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என ஆட்சியரிடம் நேரில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ராசிபுரம் பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில், நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் பிஎப்., பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் பெற்ற கடனுக்கும் தவணை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சி இதனை முறையாக செலுத்துவதில்லை. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். மேலும் ஒய்வு பெற்ற பணியாளர்கள் பலருக்கு 8 மாதம் ஆகியும் பிஎப்., உள்ளிட்ட ஒய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கும் சேர வேண்டிய பணம் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுத்து முறையாக சம்பளம்,பண பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவு தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதிதமிழர் பேரவை கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story