ஆத்தூர்: கார் மோதி இருசக்கர வாகன ஒட்டி சம்பவ இடத்திலேயே பலி
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை எல்.ஆர்.சி., நகர் பகுதியைச் சேர்ந்த, கந்தசாமி மகன் பழனிசாமி (44). இவர், அதே பகுதியில், இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஆத்தூருக்கு இருசக்கர வாகன உதிரி பாகங்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மம்பாளையம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்றார்.
அப்போது சென்னையில் இருந்து, தி.மு.க., கொடி கட்டியபடி சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து காரை நிறுத்திவிட்டு தலைமறைவான டிரைவரை தேடிவருகின்றனர்.