அட்மா திட்ட உழவர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூட்டம்
தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் இயங்கி வரும், அட்மா திட்ட வட்டார உழவா் ஆலோசனைக் குழு உறுப்பினா் கூட்டம், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜி.சாந்தி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வட்டார ஒன்றியப்பெருந்தலைவரும், அட்மா திட்ட வட்டார ஆலோசனைக் குழு தலைவருமான மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ் வரவேற்றுப் பேசுகையில், "நடப்பு ஆண்டில் செயல்படுத்தக் கூடிய பசுந்தீவனப்புல் வளா்ச்சி மற்றும் மேலாண்மை, நிலக்கடலை மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நெற்பயிரில் அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் வெளி மாவட்ட அளவில் கண்டுணா்வு சுற்றுலா ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து, இத்திட்டங்கள் குறித்து அனைத்து உறுப்பினர் முன் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழவா் ஆலோசனைக் குழு உறுப்பினா் கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள். நிறைவாக, துணை வேளாண்மை அலுவலா் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் ஆ.தமிழழகன் மற்றும் சி.ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனா்.