மருத்துவர் குடும்பம் மீது தாக்குதல்: எஸ்பி நேரில் விசாரணை.
மருத்துவர் குடும்பம்
தருமபுரி டவுன் குப்பாண்டி தெருவை சேர்ந்தவர் டாக்டர் கார்த்திகேயன். இவரது மனைவி டாக்டர் இளவரசி சங்கவை. இவர்கள் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியில் வசித்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை கிரையம் செய்ய அட்வான்ஸாக ரூ.11 லட்சம் பணம் செலுத்தி அக்ரிமெண்ட் போட்டுள்ளனர். இந்நிலையில் சில மாதங்களில் சம்பந்தப்பட்ட ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார்.
ராமகிருஷ்ணனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் இறந்த ராமகிருஷ்ணனின் உறவினர்கள் நாங்கள் தான் வாரிசு எனக்கூறி டாக்டர் தம்பதிகளிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 22ம் தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் டாக்டர் தம்பதிகளின் வீட்டு கதவை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த டாக்டரின் தாயார் சித்ரா(50) அவர்களை தட்டி கேட்டுள்ளார்.
சித்ராவை ஆயுதங்களால் மர்ம கும்பல் தாக்கியுள்ளனர் மேலும் பிரச்னைக்குரிய வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். காயம் அடைந்த சித்ராவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து டாக்டர் டவுன் போலிஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து டாக்டர்கள் கார்த்திகேயன் மற்றும் இளவரசி சங்கவை கூறும் போது, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரிடம் வீடு விலை கொடுத்து வாங்கினோம்.
வீட்டை விற்ற ராமகிருஷ்ணன் திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன்பின்னர் போலி ஆவணங்கள் மூலம் சிலர் ராமகிருஷ்ணனின் வாரிசுகள் என கூறி எங்களுடன் தகராறு செய்து வருகின்றனர் இது தொடர்பாக வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நள்ளிரவில் 100க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் வீட்டு கதவை அரிவாள், கம்பு போன்றவற்றால் தாக்கினர். இதை தட்டிக்கேட்ட எங்களது மாமியாரை ஆயுதங்களால் தாக்கினர். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். எங்கள் இருவரையும், குழந்தைகளையும் அடித்து தாக்கினார்கள். இதனால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.