திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

கூட்டத்தில் பேசும் தினகரன்

தஞ்சாவூரில் அமமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் திலகர் திடலில் அமமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமமுக கட்சிப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் பேசியது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விடியல் ஆட்சி வரப் போகிறது என திமுகவினர் கூறினர்.

ஆனால், விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கான விலையை உயர்த்துவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை என்பது 150 நாள்களாக அதிகப்படுத்துவது, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 200-க்கும் அதிகமான தடுப்பணைத் திட்டம் கச்சத்தீவு மீட்பு, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை, கல்விக்கடன் ரத்து என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆட்சிக்கு வந்த திமுகவால் ஒரு பலனும் கிடைக்கவில்லை என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாய்ப்பை அமமுகவினர் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

வருகிற மக்களவைத் தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும். அடுத்து, 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது ஆட்சி அமையக்கூடிய நிலை உருவாகும் என்றார் தினகரன்.

இக்கூட்டத்துக்கு அமமுக துணைப் பொதுச் செயலர் எம். ரெங்கசாமி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் எம். ராஜசேகரன், அமைப்புச் செயலர்கள் என். ஜோதி, சாருபாலா ஆர். தொண்டை மான், விவசாயப் பிரிவு இணைச் செயலர் என். நாராயணன், வழக்குரைஞர் பிரிவு செயலர் வேலு. கார்த்திகேயன், மாணவர் அணிச் செயலர் அ.நல்லதுரை, மாநகர மாவட்டச் செயலர் ப. ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story