வீட்டை இடிக்க முயற்சி - தடுக்கக்கோரி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

வீட்டை இடிக்க முயற்சி - தடுக்கக்கோரி  மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
தீக்குளிப்பு முயற்சி -தடுத்து நிறுத்திய போலீசார் 
தனது வீட்டை இடிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மல்லிகா(65) என்பவர், தனது இரண்டு பேர குழந்தைகளுடன் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து, மல்லிகாவிடம் நடத்திய விசாரணையில், உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் தகர ஷீட் அமைத்து கட்டியுள்ள வீட்டை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடித்து அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். அந்த வீட்டை இடித்துவிட்டால், வாழ்வதற்கு வேறு இடமில்லை. எனவே, வீட்டை இடிக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, சிறுவர்களை அழைத்து வந்து தீக்குளிக்க முயற்சிப்பது தவறான செயல் என போலீசார் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, மூதாட்டி மல்லிகா கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்நிலையில், நல்லவன்பாளையம் ஏரிக்கரை பகுதியில் குடியிருக்கும் தங்களுடைய குடிசை வீடுகளுக்கு மாற்றாக, வேறு வீடுகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags

Next Story