நடத்துனர் தீக்குளிக்க முயற்சி; காப்பாற்றிய சக பணியாளர்கள்
கோவை அருகே நடத்துனர் ஒருவர் பணிமனையில் இருந்த டீசல் பம்பை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு உண்டானது.
கோவை மாவட்டம் சூலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்து சங்கங்களின் போராட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து பணிமனை நிர்வாகம் தனக்கு கூடுதல் பணிச்சுமை தருவதாக கூறி தேனியைச் சேர்ந்த நடத்துனர் பிரதீப் இன்று மதியம் பணிமனையில் இருந்த டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
காலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பொழுது மீண்டும் பணி செய்ய வேண்டும் என பேருந்து பணிமனை நிர்வாகத்தினர் கூறி உடல் அசதி அதிகமாக உள்ளதால் நாளை பணிக்கு வருவதாக பிரதீப் கூறியதாக தெரிகிறது. கட்டாயம் பணி செய்ய வேண்டும் என பணிமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்பட்டதால் மனமுடைந்த நடத்துனர் பிரதீப் பணிமனையில் இருந்த டீசல் பம்பை தன் மீது பீச்சியடித்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை கண்ட அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நடத்துனர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து பணிமனை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பணிமனை முன்பாக ஏராளமான அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர். பணிச்சுமை காரணமாக பேருந்து நடத்துனர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.