மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
மனைவி எடுத்துச்சென்ற பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவி எடுத்துச்சென்ற பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி செல்வத்தின் உடலில் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறும் போது, எனது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து கும்பகோணத்தை சேர்ந்த சத்தியபிரியாவை 2-வது திருமணம் செய்து கொண்டேன். சத்தியபிரியா பீடா கடை வைக்கலாம் என்று கூறினார். இதையடுத்து வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்று அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் பீடா கடை வைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரத்துடன் அவர் தலைமறைவாகி விட்டார். செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் வர மறுத்து விட்டார். எனவே என்னை ஏமாற்றி பணத்தை எடுத்துச்சென்ற மனைவியை கண்டு பிடித்து ரூ.50 ஆயிரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறினார். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போட்டு சென்றனர்.
Next Story