தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று 6வது நாளாக தொடர்ந்து போராடிவரும் இந்திய தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி (எ) கேசவன் தலைமை தாங்கினார். மாநிலதுணை பொதுச் செயலாளர் ஏழுமலை, திருவண்ணாமலைமாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பாரத் கோக்கனட் ஆயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கொப்பரை தேங்காய்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கக் கூடாது, கொப்பரை தேங்காய்களை தேங்காய் எண்ணெயாக மதிப்பு கூட்டி பாரத் கோக்கனட் ஆயில் என்கிற பெயரில் மானிய விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதுமை, பருப்பு வகைகளை கொள்முதல் செய்து பாரத் ஆட்டா என்கிற பெயரிலும், வெங்காயத்தை கொள்முதல் செய்து பாரத் ஆனியன் என்கிற பெயரிலும் விற்கும் மத்திய அரசு கொப்பரை தேங்காய்களைமட்டும் கொள்முதல் செய்து அப்படியே விற்பதை தடுத்து தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா விவசாயிகள் இணைந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் 6வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தென்னை விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்பதை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் செல்வம், கொள்கை பரப்புச்செயலாளர் முனிராஜன், நிர்வாகிகள் கோதண்டராமன், பலராமன், சுப்பிரமணியன்,கிளைச் செயலாளர்கள் சங்கர், வெங்கடேசன், கோவிந்தசாமி உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.