சிறுவாச்சூர் ஆட்டு சந்தைக்கான உரிமம் ஏலம்
சிறுவாச்சூர் ஆட்டு சந்தைக்கான உரிமம் ஏலம்
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆட்டு சந்தையில் ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடிக்கு விற்பனை நடைபெறும். நிர்வாகத்தின் சார்பில் ஆண்டு தோறும் வார சந்தைக்கு உண்டான உரிமத்திற்கு ஏலம் நடைபெறுவது வழக்கமான நிகழ்வு, அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பலரும் ஏலத்தொகை கேட்ட நிலையில் இறுதியாக அரியலூரைச் சேர்ந்த குமார் என்பவர் ரூ.19 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலம் இறுதிசெய்யப்பட்ட தொகைக்கு ஜிஎஸ்டி உட்பட ரூ.22 லட்சத்து 59 ஆயிரத்து 110 ரூபாய்க்கு உரிய வரைவோலையினை திங்கள் கிழமை மாலைக்குள் செலுத்திட வேண்டும் என்றும். அவ்வாறு தவறினால் மறு ஏலம் விடப்படும் என்ற நிபந்தனையுடன் ஏலம் நிறைவு பெற்றது. இந்த ஏலம் எடுப்பதற்கு முன்பாக கிராம த்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் நாட்டாண்மைகாரர்களை கலந்து ஆலோசித்து பிறகு ஏலம் எடுக்க வேண்டும் என்ற காலம் காலமாக இருந்து வந்த பழக்கத்தை மீறி ஏலம் நடைபெற்றதாகவும். இதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏலம் நடைபெற்ற இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். போலிசாரின் சமாதான பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக கலைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது