ஆவடி அருகே நண்பரை கொலை செய்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
ஆவடி அருகே நண்பனை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்குஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை அருகே ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், அவரது நண்பர் செங்குன்றம் கலியமூர்த்தியுடன் இணைந்து வாகனங்களுக்கு பைனான்ஸ் வழங்கி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கடந்த 2013ம் ஆண்டு ஆவடி ரயில் நிலையம் அருகே பிரபாகரன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கலியமூர்த்தி கொளஞ்சி, தாமோதரன் உள்ளிட்ட ஏழு பேரை ஆவடி போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் கொலை தொடர்பாக நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் கலியமூர்த்தி, கொளஞ்சி, தாமோதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1,500 ரூபாய் அபராதமும், அதை கட்டத் தவறினால் மேலும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.