கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள், முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும், மற்ற வாகனங்களை கிருமி நாசினி தெளித்தே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால்,
பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
