ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு : 57 போ் காயம்
பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி கிராம மக்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் க. தட்சிணாமூா்த்தி தொடக்கிவைத்தாா். முதலில் 4 கிராமக் கோயில் காளைகளும், தொடா்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டு வந்திருந்த 626 காளைகளும் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 219 மாடுபிடி வீரா்கள் களமிக்கப்பட்டனா்.
சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞா்களைக் கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில தொடக்கூட முடியாதபடி சென்றன. இருப்பினும் பல காளைகளை வீரா்கள் அடக்கினா். ஜல்லிக்கட்டில் 30 மாடுபிடி வீரா்கள், 17 பாா்வையாளா்கள், 10 மாட்டு உரிமையாளா்கள் என 57 போ் காயமடைந்து, மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனா். அவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை, திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா். மாடு முட்டியதில் தாயின் அரவணைப்பிலிருந்த 3 வயது குழந்தை பொன்னழகு தலையில் காயமடைந்தான்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அனைவருக்கும் தென்னங்கன்றுகளும் பரிசளிக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தலைமையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.