திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

நகராட்சி ஆணையர் திடக்கழிவு மேலாண்மை குறித்து தூய்மை பணியாளரிடம் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவேற்காடு நகராட்சியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையராக கணேசன் என்பவர் பொறுப்பேற்றார். திடக்கழிவு மேலாண்மை குறித்து அதிக ஆர்வம் கொண்ட அவர், தினமும் காலை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு, பஸ் நிலையம், வேலப்பன்சாவடி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்படும் கடைகளில் குப்பைகளை சாலையில் வீசாமல், தூய்மை பணியாளரிடம் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையுமா' என்ற பழமொழியை நிஜமாக்கும் வகையில், தினம் ஒரு பள்ளியை தேர்வு செய்து, அங்குள்ள மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் வாயிலாக மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோருக்கும் திடக்கழிவு குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று தொடர்ந்து அவற்றை செய்து வருகிறார். அதேபோல், தெரு விளக்கு, குப்பை, சாக்கடை உள்ளிட்ட நகராட்சி தொடர்பான பிரச்னைகள் குறித்து யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு கமிஷனர் கணேசன் விளக்கமளித்து வருகிறார். அவரின் இந்த செயல்கள், மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்கள் பொதுமக்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியை தனலட்சுமி என்பவர், கமிஷனர் கணேசனின் செயல்பாடுகளை பின்பற்றி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழியால் ஏற்படும் அபாயம் குறித்து மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் பாடம் நடத்தி வருகிறார். தனியார் ஆசிரியை பாடம் எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருவேற்காடு கமிஷனர் கணேசனின் செயல்பாடுகளை அனைத்து நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்றி திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story