100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வாக்காளர் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய முதல் முறை வாக்களிக்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் தாளாளரும், வக்கீலுமான ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பார்கவி, செஞ்சி தாசில்தார் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதல்முறையாக வாக்களிக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஒன்று சேர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் வரும் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது என உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.