நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
விழிப்புணர்வு வாகனங்கள்
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன.
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் பேப்பர் டம்ளர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழக தலைமை செயளாலர் ஷிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா அறிவுறுத்தலின் படி பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'TNPCB' சென்னை கிரீன் வாரியர்ஸின் ஆறு உறுப்பினர் குழுவை இ-பைக் மூலம் ஊட்டிக்கு அனுப்பியுள்ளனர், இவர்கள் இன்று முதல் மலர் கண்காட்சி முடியும் வரை ஊட்டியின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
இருசக்கர வாகனங்களை கூடுதல் ஆட்சியர் கவுசிக் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.