திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு

திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரியில் மெழுகுவர்த்தி மூலம் இந்திய வரைபடம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் வித்தியாசமான முறையில்‌ நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, மாவட்ட சப் கலெக்டர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சௌமியா ஆனந்த் கலந்து கொண்டு நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சப் - கலெக்டர் சௌமியா பேசுகையில்: முதல்முறையாக வாக்களிப்பவர்கள் ஜனநாயக கடமையை சரியான முறையில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும் வாக்களிப்பதின் அவசியத்தையும், ஒற்றை விரல் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்றார். அனைவரும் வாக்களிப்பதன் மூலம் நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என உணர வேண்டும், ஓட்டு போடுவதற்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு சென்றடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் ராஜபிரபு, ஜெயசந்திரன், செர்லின், ரேவதி, நவீன்குமார், விஸ்வபாரதி, தேவி ஆகியோர் தலைமையில் மெழுகுவர்த்தி மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி, நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும், பாராளுமன்ற கட்டடத்தை வண்ணக்கோலமாக வரைந்தும், வாக்களிப்பது நமது உரிமை என்ற விழிப்புணர்வும், மேலும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி தங்களது உறவினர்களுக்கு அனுப்பப்பட்டது. பிறகு, கையொழுத்து பலகையில் எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற உறுதிமொழியோடு கையெப்பமிட்டனர். நிகழ்வில் துணை தாசில்தார் அருள், கல்லூரி பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, முஸ்தாக், தீபக், ராதாகிருஷ்ணன், சந்தனமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story