நாமகிரிப்பேட்டையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு


விழிப்புணர்வு
தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர், 21ம் தேதி பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. கணேஷ்குமார், அவர்கள் தலைமை வகித்தார்.
இதில், 30க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், மாணவர்களை காவல் நிலையம் உள்ளே அழைத்துச் சென்று காவல்துறையினரின் பணி குறித்தும், சிறார் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறினார்.
மேலும் போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், கவச உடை குறித்தும் மாணவர்களிடம் எடுத்து கூறி விளக்கம் அளித்தார். பின்னர் மாணவர்களிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். அதனை வாங்கிய மாணவர்கள் இலக்கை குறிவைத்தனர். இதுபோன்ற செயல்பாடுகளால் போலீசாரின் செயல்பாடுகள், சிறார் பாதுகாப்பு உள்ளிட்டவை தெரிந்துகொள்வ துடன், மாணவர் - போலீஸ் நல்வுறவு மேம்படுவதுடன், தேவையற்ற அச்ச உணர்வும் இருக்காது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காவலர்கள் மற்றும் தனியார் பள்ளி இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


