விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின், விக்ஷித் பாரத் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மோகனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட சின்னபெத்தாம்பட்டி, லத்துவாடி, அணியாபுரம், தோளூர், ஆரியூர் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், மெட்ராஸ் உர நிறுவனம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், இந்திய அஞ்சல் துறை சார்பில், நவீன முறை விவசாய சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோனைகள் மற்றும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
மேலும், ட்ரோன் இயந்திரத்தின் மூலம் நானோ யூரியா கலந்து தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் பிரதம மந்திரியின் உஜ்வாலா கேஸ் இணைப்பு, எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது, பிரதம மந்திரியின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் உர நிறுவன கூடுதல் மேலாளர் சுரேஷ் குமார், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் முத்துசாமி, சங்கர், தேன்மொழி, அஞ்சல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.