சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை மற்றும் மனநலத்துறை சார்பாக, உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில் ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுமார் 1.5 சதவீதம் பேர் உள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசின் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில் ஆட்டிசம் குறைபாடு உடைய செயல்களை ஆய்வு செய்வதற்காகவும், புதிய மையங்கள் திறப்பதற்காகவும் சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைபெறுகிறது.
அரசினுடைய திட்டங்கள் மட்டும் இல்லாமல் இது தொடர்பான அறிவியல் செய்திகள் எல்லோருக்கும் செல்லக்கூடிய அளவிற்கு நிறைய விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று வயதில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டால்; அதனை நம்பிக்கைகள் சார்ந்து மட்டுமே அதனை அணுகுவது என்பது கூடாது. இந்த மதியிறுக்க குறைபாட்டிற்கு நவீன மருத்துவத்தில் வந்திருக்கக்கூடிய பல்வேறு வசதிகளை ஏழை எளிய மக்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆட்டிசம் குழந்தைகளின் அறிகுறிகள் சீக்கிரமாக கண்டறியப்பட்டு, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுப்பதன் மூலம் அறிவுத்திறனில் முன்னேற்றம் காணமுடியும். மேலும், அந்தந்த கிராமங்களில் இருக்கக்கூடிய குழந்தைகளை ஆரம்பக்கட்டத்தில் பார்க்கக்கூடிய அரசு பணியாளர்களான செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மதியிறுக்கதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நிறைய பயிற்சிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமாக ஆட்டிசம் குறைபாடு, மனநல மருத்துவம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தேவையான அறிவியல் பயன்களை ஏழை எளிய மக்களுக்கும் எடுத்துச் செல்வது மிகவும் தேவையாக இருக்கிறது. எனவே மருத்துவ கல்லூரிகளும், அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களிடையே இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆத்திச்சூடி ஒப்புவித்தல், யோகா, சிலம்பாட்டம் மற்றும் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் இக்குழந்தைகள் பங்கேற்றனர். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும், 2-ம் ஆண்டு செவிலியர் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பின்னர் மதியிறுக்கம் (ஆட்டிசம்) குறைபாடு கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிகிச்சை முறைகள், அறிகுறிகளை சீக்கிரமாக கண்டறியப்பட்டு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுப்பதன் மூலம் அறிவு திறனில் முன்னேற்றம் அடையச்செய்தல், அக்குழந்தைகளை கையாளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.