உலக புவி தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். நீலகிரியில் உள்ள 'கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்' மூலம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புவி பாதுகாப்பு குறித்து "நீலகிரியை நேசிப்போம் என்ற தலைப்பில்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புவி பாதுகாப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும் நீலகிரி பழங்குடி இனக்குழு உறுப்பினருமான வாசமல்லி கூறியதாவது:- உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.
சூரிய குடும்பத்தில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ தகுதி படைத்ததாக உள்ளது. நம்மை தாங்கும் பூமியை நாம் பாதுகாக்க வேண்டும். உலக பூமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிளாஸ்டிக்கில் இருந்து பூமியை பாதுகாப்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வருவதால், சுற்றுச்சூழலுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும். நீலகிரியில் நிலத்தின் தன்மையை அறியாமல் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால், கடந்த பருவமழையின்போது மண் சரிவு பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
எனவே நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரியில் முற்றிலும் முடியவில்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். பிளாஸ்டிக்கை பூமி மட்டுமல்ல வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே புவி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திரளான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.