விழிப்புணர்வு பிரசுரம்; காவல் துறை வழங்கல்
சங்கராபுரத்தில் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க, வெளியூர் செல்லும் போது தகவல் தெரிவிக்கும்படி போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
சங்கராபுரம் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை போகும் சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது நகைகளை வீட்டில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம். வெளியூர் செல்லும்போது காவல் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.
பஸ் பயணத்தின்போது, நகை மற்றும் பணம் எடுத்துச் செல்லும்போது அதிக கூட்டம் உள்ள பஸ்களில் ஏற வேண்டாம். நகைகளுக்கு பாலிஷ் போடுகிறோம் எனக் கூறி யாராவது வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களிடம் முகவரி அல்லது தண்ணீர் கேட்பது போல் யாராவது வந்தால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துண்டு பிரசுரங்களை தேவபாண்டலம், எஸ்.குளத்துார், தியாகராஜபுரம், ஊராங்காணி, பூட்டை ஆகிய கிராமங்களில் ஆட்டோ முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.