பாலியல் துன்புறுத்தல் எதிரான விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நாமக்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு) தொடங்கி பேருந்து நிலையம் மணிகூண்டு வழியாக திருச்சி சாலை சென்று, பின்பு பாரத் ஸ்டேட் வங்கி வழியாக மீண்டும் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) வரை சுமார் 3 கீ.மி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இந்திய அரசியல் சாசனச் சட்டத்திலும் பெண்களுக்கான பிற பாதுகாப்பு சட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று, பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு, குறிப்பாக பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட இம்முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் நடைமுறையில் பெண்கள் பணிபுரியும் இடங்களை அவர்களுக்கான பாலியல் வன்முறையற்றத் தளமாக உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.
பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியான தொடர்பு மற்றும் முயற்சிகள், பாலியல் சலுகைக்கான ஒரு கோரிக்கை அல்லது வேண்டுமென்றே பாலியல் அர்த்தமுள்ள கருத்துகளைக் கூறுவது ஆபாசப் படம் காட்டுவது உள்ளிட்டவையாகும்.
பாலியல் துன்புற்ற பெண் ஒரு பணியிடத்தைப் பொறுத்தவரையில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் செயலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக புகார் அளிக்கும் எந்த வயதானாலும் பாலியல் துன்புற்ற பெண் ஆவார்.
பிரிவு – 2(A) பாலியல் சம்மபந்தப்பட்ட கீழ்காணும் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் இச்சட்டத்தின் கீழ் அந்தந்த பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள Internal Committee (உள்ளாகக் குழுவில்) புகார் செய்யலாம்.
ஒரு பணித் தளத்தின் வேலையளிப்போர் ஒவ்வொருவரும் எழுத்துப்பூர்வமான ஒரு ஆணையின் மூலம், உள்ளக புகார்கள் குழு என்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும். பணிதளத்தின் தலைமை ஊழியர், மூத்த நிலையிலான ஒரு பெண் ஊழியர், ஊழியர்களிடையே இருந்து இரண்டு பேருக்கு குறையாத உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்பு அல்லது சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் ஆவார்.
10 தொழிலாளர்களுக்கு குறைவாக இருப்பதால் உள்ளக புகார்கள் குழு அமைக்கப்படாத நிலையில் நிறுவனங்களிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பெறுவதற்காக உள்ளுர் புகார்கள் குழு அமைக்கப்பட வேண்டும்.
சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். தொடர்ச்சியான சம்பவங்களாக இருப்பின் கடைசி சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். ஏற்புடைய சரியான காரணம் இருப்பின் கால தாமதமாக பெறப்பட்ட புகார் ஏற்கப்படும்.
பாதிக்கப்பட்ட நபர் மாற்றுத் திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவரின் சட்டப்பூர்வமான வாரிசு தாரர் அளிக்கலாம். 90 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும். தீர்ப்பின்படி நடக்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.
இப்பேரணியில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.