நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
விழிப்புணர்வு ஊர்வலம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து சேலம் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிருந்தாதேவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
மேலும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில், 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- 100 சதவீதம் வாக்குப்பதிவு சேலம் மாவட்டத்தில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண் வாக்காளர்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கென சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை 100 சதவீதம் நிறைவேற்றிட முன்வரவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.