ஶ்ரீபெரும்புதூர் அருகே தெருக்கூத்து நாடகம் வாயிலாக விழிப்புணர்வு
விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்கள்
லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வருவாய்த் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம்சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுதும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், செரப்பனஞ்சேரி குறுவட்டம், துாண்டல்கழனி நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் நேற்று விழிப்புணர்வு நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ.,சரவணகண்ணன் தலைமை தாங்கினார். இதில், தெருக்கூத்து நாடக கலைஞர்கள் வேடம் அணிந்து, 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும், ஓட்டிற்கு பணம் பெறக் கூடாது, ஓட்டளிப்பது நம் ஜனநாயக கடமை உள்ளிட்டவையை வலியுறுத்தி பொதுமக்களிடம்,
தெருக்கூத்து நாடக வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து, படப்பை, ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையம், செரப்பனஞ்சேரி, ஒரகடம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், குன்றத்துார் தாசில்தார் நாராயணன், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், ரம்யா, வருவாய்த் துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்."