அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - வேளாக்குறிச்சி ஆதீனம் வாழ்த்து

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - வேளாக்குறிச்சி ஆதீனம் வாழ்த்து

வேளாக்குறிச்சி ஆதீனம் 

ராமர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, ராமாயணம் கூறும் வாழ்வியல் தத்துவங்களை நினைவு கூருவதாக அமைக்க பெற்றிருப்பது சாலச் சிறந்தது. ராமர் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்புற நிகழ்வில் பங்கு பெறுவோர் எல்லா நலன்களும் பெற்று நலமுடன் வாழ தியாகேச பெருமான் திருவடி மலர்களை சிந்தித்து ஆசீர்வதிக்கிறேன் என வேளாக்குறிச்சி ஆதீனம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச் சாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இந்து தர்ம நெறிமுறைகளின் படி அமைதியான அறநெறி வழியில் ராமர் கோயில் மீண்டும் எழுந்திருப்பது நல்லிணக்கத்தை போற்றுவதாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் சட்டரீதியான சமரசத் தீர்வை பெற்று தந்த பெருமைக்குரியவர் பிரதமர் மோடி. ராமர் வழிபடு மூர்த்தியாக மட்டுமில்லாமல் மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்துபவராகவும், அவதார புருஷராக இருந்தாலும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய போதிலும், அதற்கு பிராயச்சித்தமாக பாவதோஷங்களை போக்குவதற்கு ராமேசுவரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து சிவ வழிபாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்.

பக்தர்களுக்கு வட இந்தியாவில் கயா நகர் உசிதமானது போல, திருவாரூர் அருகில் நதிக்கரையில் ராமபிரானே முன்னோர்கள் வழிபாடு நிகழ்த்தியதன் வாயிலாக அவ்விடம் இன்றும் கயாக்கரை, அதாவது கேக்கரை என தற்போது அழைக்கப்படுகிறது. நமது வேளாக்குறிச்சி ஆதீன அருளாட்சிக்கு உட்பட்ட 'ராமன தீச்சரம்' சிவாலயத்தை ராமபிரான் வழிபட முற்பட்டபோது, நத்தியம் பெருமான் ராவணனை வதம் செய்வதால் தடுக்க முற்பட, உமையவளே நந்தியை விலகி இருக்கச் செய்து ராமபிரான் சிவனை வழிபட வழிகோலியுள்ளார். ராமர் வழிபட்டதால் இத்தல இறைவன் ராமநாதர் என பெயர் பெற்றார்.

ராம கதையாகிய ராமாயணம் ஒரு இதிகாச நூலாக மட்டுமின்றி, மானுட வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துவதாக அற நெறி போதிப்பதாக, வாழ்வியலுக்கு வழிகாட்டுவதாக விளங்குகிறது. இத்தகு சிறப்புடைய ராமாயணம் சுட்டும் ராமராஜ்யம் இந்தியாவில் தொடருமேயானால் பாரத் மக்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள். ராமர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, ராமாயணம் கூறும் வாழ்வியல் தத்துவங்களை நினைவு கூருவதாக அமைக்க பெற்றிருப்பது சாலச் சிறந்தது. ராமர் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்புற நிகழ்வில் பங்கு பெறுவோர் எல்லா நலன்களும் பெற்று நலமுடன் வாழ தியாகேச பெருமான் திருவடி மலர்களை சிந்தித்து ஆசீர்வதிக்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story