அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

குமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த இரண்டு பேரணிகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வலம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது.
ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
