வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஐய்யப்ப பக்தர்கள்

தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஐய்யப்ப பக்தர்களை, மீட்கக்கோரி துறையூர் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருவத்தூர் கிராமத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து ஒரு குழுவினர் புறப்பட்டு சென்றனர். 10 குழந்தைகள் உட்பட 58 நபர்கள் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்றில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் முதலில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள 'பொய் சொல்ல மெய்யன் சாஸ்தா' கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதனையடுத்து கடந்த சில தினங்களாக தென் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் துறையூர் பகுதியில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் சிக்கி தவித்தனர்.

மேலும் அவர்கள் சென்ற பேருந்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், உணவின்றி கைக்குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள மாடி ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து ஐயப்ப பக்தர்கள் தங்களது நிலை குறித்து துறையூரில் உள்ள உறவினர்களுக்கு, செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தனர். இத்தகவலை அறிந்த ஐயப்ப பக்தர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்டு தரக்கோரி, நேற்று இரவு துறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய துறையூர் போலீசார், இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். துறையூர் அருகே சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள், வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவத்தால் மருவத்தூர் கிராம பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Tags

Next Story