மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தை - சாலை மறியல்

மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தை - சாலை மறியல்
டிஎஸ்பி, வட்டாட்சியர் பேச்சுவார்த்தை
பட்டுக்கோட்டையில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால், குழந்தை இறந்து பிறந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெள்ளூர் புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவரமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கண்ணகி (33),. கர்ப்பிணியான கண்ணகிக்கு வியாழக்கிழமை மதியம் 3:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, பிரசவ வலி இருந்து நிலையில் வெள்ளிக்கிழமை (8 ஆம் தேதி) அதிகாலை 3 மணிக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்த போது, வயிற்றில் ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது.

இது குறித்து கண்ணகியின் உறவினர்களிடம் மருத்துவர் தெரிவித்த போது, 'உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி' ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர் கண்ணகியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவனைக்கு வந்த தஞ்சாவூர் மாவட்ட இணை இயக்குனர் திலகம், மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசியதால், கண்ணகியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்து மருத்துவனை முன்பு வெள்ளிக்கிழமை மாலை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வட்டாட்சியர், காவல்துறையினர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோர், கண்ணகியின் உறவினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்படும் எனவும், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டனரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story