கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
உலகில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், அபூர்வ வகையான கடல் தாவரங்கள் அதிகமாக வசிப்பதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உயிர்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இக்கடல் பகுதியில் வாழ்ந்துவரும் ஆமைகள் கடற்கரைக்குவந்து பாதுகாப்பான இடத்தைத் தேர்வுசெய்து அங்கு குழிதோண்டி அதில் முட்டையிட்டு அவற்றை பாதுகாக்கின்றன. இந்த முட்டைகளை சமூகவிரோதிகள் எடுத்து அழித்து விடுவதால் ஆமைகள் இனப்பெருக்கம் குறைய தொடங்கியது. இதனைத்தடுக்கும் வகையில் வனத்துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மேலும் ஆண்டுதோறும் ஆமை முட்டை இடும் இடங்களை கண்டுபிடித்து அவற்றை சேகரித்து முகுந்தராயர் சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்ததும் அவற்றை கடலில்விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மண்டபம் வனச்சரகத்தில் உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்தை வைத்து பாதுகாக்கப்பட்டது அவ்வாறு குழிகளில் பாதுகாக்கப்பட்ட முட்டைகள் 52 நாட்களுக்குப்பிறகு குஞ்சு பொரித்து 100 குஞ்சுகள் வெளிவந்தன இந்த நிலையில் ஆமை குஞ்சுகளை வனத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி கடற்கரையில் கடலில் விட்டனர். இந்த ஆமை குஞ்சுகள் தத்தித்தத்தி நடந்து கடலுக்குள் சென்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது ஆமைக் குஞ்சுகள் கடலுக்குச் செல்லும் காட்சியை அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.