வேட்பாளர் பெயர் இல்லாமல் ஆதரவு கேட்கும் பகுஜன் சமாஜ் கட்சி
காஞ்சிபுரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ஆதரவு கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ஆதரவு கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பல்வேறு தேசிய அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என பெரும் பரபரப்பாக காணப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பாஜகவுக்கு ஆதரவுக்கு கோரி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அதிமுக திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை போட்டியிட விரும்பும் அவர்கள் பெற்று அதனை பூர்த்தி செய்து அளிக்க கூறி அதனைப் பெற்றுக் கொண்டு நேர்காணலையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தி முடித்து உள்ளது.
மேலும் திமுக தலைமையில் ஆன கூட்டணி கட்சிகள் உடைய தேர்தல் உடன்பாடும் ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ளது. ஆகிய அதிமுக , பாமக , பாஜக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் பல்வேறு கட்டங்களில் நடந்து வருவதாகவும் ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் என தெரிய வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிக்காத நிலையில், பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு சுவரொட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுவரொட்டியில், இந்தியாவிலேயே கார்ப்ரேட்களிடம் கையேந்தாமல், கூட்டணி இன்றி சமத்துவ ஆட்சியை அமைத்திட காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் நமது வேட்பாளர் பெயரை காலியாக விட்டுவிட்டு வாக்களிப்பீர் யானை சின்னத்திற்கு என இந்த சுவரொட்டியில் வாசகம் காணப்படுகிறது.
இந்த சுவரொட்டியில் அம்பேத்கர், கன்சிராம் , மாயாவதி உள்ளிட்டோர் படங்களும் தமிழக நிர்வாகிகளான ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாகி படமும் இடம்பெற்றுள்ளது. வேட்பாளர் பெயர் இல்லாமல் யானை சின்னத்திற்கு ஆதரவு அளியுங்கள் என கேட்டுள்ள இந்த செயல் ஒருபுறம் ஆச்சரியத்தையும் , ஒருபுறம் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.