சீட்டு மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்
சேலம் மத்திய சிறை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அல்தாப் ஷாதித் (வயது 35). இவர், கடந்த ஆண்டு சீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக செய்யாறு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அல்தாப் ஷாதித்துக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நேற்று அவர் சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக அவரிடம் பணம் கட்டி ஏமாந்த பெண்களுக்கும், அவரது நிறுவனத்தில் ஏஜென்சியாக பணியாற்றியவர்களுக்கும் தகவல் கிடைத்தது.
இதனால் அவர்கள் நேற்று மதியம் சேலம் மத்திய சிறை முன்பு காத்திருந்தனர். ஆனால் அல்தாப் ஷாதித்தை அவரது வக்கீல்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசி மற்றொரு நுழைவு வாசல் வழியாக ஜாமீனில் அழைத்து சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவேசம் அடைந்து சிறைச்சாலை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அதேநேரத்தில் அந்த வழியாக காரில் வந்த போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டதை பார்த்து காரில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மோசடி செய்த நபர் மீது செய்யாறு போலீசில் புகார் செய்யுமாறும், தேவையில்லாமல் இங்கு மறியலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே ஜாமீனில் அல்தாப் ஷாதித் வெளியே வந்தால் சிறை வாசல் முன்பே அவரை சிலர் கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.