பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, நீலகிரியில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

முஸ்லிம்கள் மெக்காவில் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதையொட்டியும், இப்ராஹிம் நபியின் தியாகத்தை வலியுறுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் என்ற பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10-வது நாள் இந்த பண்டிகை நடக்கும். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறும் வகையில் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் ஆடு, மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தனர். ஆடு தனி நபராகவும், மாடு கூட்டுக்குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக்கொண்டனர். மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கினார்கள்.

ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாம் ஹமீது தலைமையிலும், மதினா பெட்ரேசன் பள்ளிவாசலில் தலைமை இமாம் முகமது அலி தலைமையிலும், காந்தல் பள்ளிவாசலில் இமாம் சகாபி தலைமையிலும், குன்னூர் பாத்திமா பள்ளிவாசலில் நீலகிரி மாவட்ட தலைமை காசி முஜீப் உல் ரகுமான் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் குன்னூர், கூடலூர் மஞ்சூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நடந்த சிறப்பு தொழுகைகளில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story