மயிலாடுதுறையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - எம்பி சுதா பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையில் எம்பி சுதா கலந்து கொண்டார்.

இஸ்லாமிய பண்டிகைகளின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் பாசில் பாக்கவி தலைமையில் அப்துல் காதர் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இத்தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு‌ வாழ்வில் வளமோடு, ஒற்றுமை உணர்வோடும், சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர், தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இச்சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா கலந்து கொண்டு தொழுகை செய்தார்.

இஸ்லாமியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதேபோல் மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து வடகரை, அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், நீடூர், கிளியனூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிறப்புத் தொகுதியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story