பக்ரீத் பண்டிகை- களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை!
ஆட்டுச் சந்தை
கோவை:பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கிராமங்களிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புல்வெளிகள் அதிகம் நிறைந்த பகுதிகளாக இருப்பதாலும் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ள காரணமாக ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது.
கோவை, ஈரோடு,திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களிலில் இருந்தும் கர்நாடகா,கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க சந்தையில் திரண்டுள்ள வியாபாரிகள் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு ஆகிய பல்வேறு வகையான ஆடுகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.
குட்டி ஆடுகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போதுவரை சுமார் 1 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.