பாலசுந்தரனார் நூற்றாண்டு விழா கவியரங்கம்
திருவையாறு ஒளவைக் கோட்டத்தில் கரந்தைத் தமிழறிஞர், பாவலரேறு பாலசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் 100 கவிஞர்களின் கவியரங்கம் நடந்தது. திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் ஆனந்தன் மாலை அணிவித்தார். புலவர் கந்தசாமி தலைமை வகித்தார்.தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் தெய்வநாயகம் பாவலரேறு பாலசுந்தரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் மதிவாணன் மலர் வணக்கம் செலுத்தினார்.
கவிஞர்கள் புகழேந்தி, புதுச்சேரி இளமதி ஜானகிராமன், முனைவர் சத்தியா, மகேஸ்வரி, கலைமகள் சிவஞானம், டாக்டர் தமிழரசன், இளவரசு, டாக்டர் குணசேகரன், மணிமாறன், புலவர் ஜெயராமன் உள்ளிட்டோர் தலைமையில் 10 அமர்வுகளில் கவிஞர்களின் கவியரங்கம் நடந்தது. மிருதங்கக் கலைஞர் சதீஷ்குமார், கவிஞர் சாமி. மல்லிகாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. முனைவர் கலைவேந்தன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.
டாக்டர் நரேந்திரன், பேராசிரியர் இளமுருகன் ஆகியோர் கவிஞர்களுக்கு பாவலர் மணி என்று விருதினை வழங்கினர். பின்னர் நடந்த ஒளவைக் கோட்ட பேரவைக் கூட்டத்தில் பாவலரேறு பாலசுந்தரனார் படைப்புகளை நாட்டுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தனிப்பெரும் கவிஞராகத் திகழ்ந்த பாலசுந்தரனார்க்கு கரந்தையில் மணிமண்டபம் அமைத்து சிலையை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முனைவர் சுகன்யா, ஆசிரியைகள் கோகிலா, கலைவாணிஆகியோர் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஒளவைக் கோட்ட ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், ஒளவை அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.