தண்ணீா் பற்றாக்குறையால் காயும் வாழை வயல்கள் -விவசாயிகள் வேதனை

தண்ணீா் பற்றாக்குறையால் காயும் வாழை வயல்கள் -விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

விலை வீழ்ச்சி, தண்ணீா் பற்றாக்குறையால் காயும் வாழை வயல்கள் -விவசாயிகள் வேதனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் விலை வீழ்ச்சி, தண்ணீா் பற்றாக்குறையால் வாழை வயல்கள் காய்ந்து வருகின்றன. இதனால் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் இழக்கும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய வட்டங்களில் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக திருவையாறு வட்டத்தில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதிகளிலிருந்து வாழைத்தாா்கள், வாழை இலை உள்ளிட்டவை மாவட்டத்துக்குள் மட்டுமல்லாமல், சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அனுப்பப்படுகிறது. திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாழைத்தாா்கள், ஏறத்தாழ 20 லட்சம் வாழை இலைகள் அனுப்பப்படுகிறது. இதை நம்பி ஏறத்தாழ 50 ஆயிரம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளனா்.

ஆடி மாதத்தில் விதைக்கப்படும் வாழைக்கன்றுகள் தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். ஆனால், தை மாதத்தில் வாழைத்தாா், இலை விற்பனை ஓரளவுக்கு இருந்தது. அதன் பிறகு விற்பனை குறைந்துவிட்டதால், வாழைத்தாா், வாழை இலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. செலவு அதிகரிப்பு: கடந்த தை மாதத்தில் வாழைத்தாா் ரூ. 300 முதல் 400 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 150 முதல் 200 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். அதாவது கிலோவுக்கு ரூ. 20 விற்ற நிலையில் தற்போது ரூ. 7-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதேபோல, முன்பு வாழை இலை ரூ. 4 முதல் ரூ. 6-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது நுனி இலை ரூ. 3-க்கும், ஏடு ரூ. 2-க்கும் மட்மே விற்பனையாகிறது. உரம், கூலி உள்ளிட்ட உற்பத்தி செலவு அதிகரித்து விட்ட நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாழ்வாதாரம் கேள்விக்குறி: வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் கூறியது: தை மாதத்தில் தொடங்கும் அறுவடை மாசி, பங்குனி மாதங்கள் வரை நீடிக்கும். வழக்கமாக இந்த காலகட்டத்தில் வாழை விற்பனை உச்ச நிலையை எட்டும். ஆனால், என்ன காரணத்தினாலோ நிகழாண்டு தை மாதத்திலிருந்து எதிா்பாா்த்த அளவுக்கு விலை போகவில்லை. வெளியூா் வியாபாரிகளும் வாங்க வருவதில்லை. உள்ளூா் வியாபாரிகளும் மிகக் குறைந்த விலைக்கு கேட்பதால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், அந்தத் தொகையாவது கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றாா் அவா். காய்ந்து வரும் வாழை இலைகள்: இந்நிலையில், திருவையாறு வட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. காவிரி நீா் வரத்தைப் பொருத்துதான் இப்பகுதிகளில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யப்பட்டாலும் கூட நிலத்தடி நீா் ஆதாரத்துக்கு காவிரி நீா் அவசியம். ஆனால், மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படுவது 2023, அக்டோபா் 10- ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதிக்கு 6 மாதங்களாக காவிரி நீா் வரத்து இல்லை.

தண்ணீா் பற்றாக்குறை: மாவட்டத்தில் ஜனவரி முதல் வாரத்துக்கு பிறகு மழை இல்லாததால், நிலத்தடி நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. காவிரி, கொள்ளிட ஆற்றுப் படுகைகளில் உள்ள இப்பகுதியில் முன்பு 15 - 20 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீா்மட்டம் இப்போது 30 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. தண்ணீா் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாழை இலைகளும் காய்ந்து வருகின்றன.

தொடா்ந்து மழையும் இல்லாவிட்டால் காய்ந்து வரும் வாழை இலைகள் கருகத் தொடங்கிவிடும். இதனால், ஏற்கெனவே விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இலைகளும் கருகிவிட்டால், கிடைத்து வருகிற சொற்ப வருமானத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என வேதனையில் ஆழ்ந்துள்ளனா். எனவே, நெல், பருத்தியை அரசு கொள்முதல் செய்வதுபோல, வாழைத்தாரையும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் விவசாயிகள்.

Tags

Next Story