பள்ளிபாளையத்தில் தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு

பள்ளிபாளையத்தில் தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு

விற்பனைக்கு வந்த வாழை இலை 

பள்ளிபாளையத்தில் சீதோசன நிலை மாறுபாடாலும் தேவை அதிகரிப்பாலும் வாழை இலை விலை அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தேவை அதிகரிப்பாலும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாலும், வாழை இலை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏராளமான வாழை இலை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது .

கடந்த சில வாரங்களாக வாழை இலையின் விலை ஏற்றம் கண்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் உள்ள வாழை இலை வியாபாரி ஒருவர் கூறும்பொழுது, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாழை இலை விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறேன்.

. 40 ஆண்டுகளுக்கு முன்பாக 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு மூன்று ரூபாய்க்கு விற்பனையான நாள் முதலே இந்த தொழிலில் நாங்கள் இருந்து வருகிறோம். தற்போது அதே 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை, ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாகவே பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவை அதிகரித்த நிலையில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் , மாநில அரசுகளின் தொடர் விழிப்புணர்வு காரணமாக ஓரளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு, வாழை இலையில் உணவு பண்டங்களை வழங்கும் போக்கு அதிகரித்து வருகிறது . இதன் காரணமாகவும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.

முக்கியமாக திருமண விசேஷ நாட்களில் மட்டுமே வாழை இலைகள் கூடுதல் டிமாண்ட் ஏற்பட்டு, விலை ஏற்றம் காணும். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மாறி, ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், இயற்கையின் சூழல் மாறி உள்ளதாலும், தற்போது வாழை இலையின் விலை ஏற்றம் கண்டுள்ளது . 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு தற்போது 1500 முதல் 2000 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது. மேலும் உணவகங்களுக்கும் தினமும் வாழை இலைகளை கட்டாயம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளதால் நாங்களும் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் வாழை இலைகளை வாங்கி வருகிறோம்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு வாழை இலைகள் உற்பத்தியாகும் இடமாகும் . அங்கு சமீபகாலமாக அதிக அளவு காற்று மற்றும் மழையின் காரணமாக வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டதாகவும், அதனால் வாழை இலைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். என அங்குள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எங்களுக்கு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உள்ளூரில் தினந்தோறும் நாங்கள் பல்வேறு வணிக நிறுவனங்கள், உணவகங்கள் சிறிய அளவில் செயல்படும் சாலையோர கடைகளுக்கு வாழை இலைகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.. அப்படியே வழங்கினாலும் கூடுதல் விலை வைத்து வாழை இலைகளை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு கூட வாலை இலைகள் இல்லை என்பதுதான் யதார்த்த நிலையாகவும் உள்ளது.அதையே மீறி நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வாழை இலைகள் தரமற்றதாகவும் ஆங்காங்கே கிழிந்தும் உள்ளதாலும், முறையாக அந்த வாழை இலைகளை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

இதனால் வாடிக்கையாளருக்கும் எங்களுக்கும் ஒருவித மனக்கசப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. தற்போது வைகாசி மாதம் முகூர்த்த சீசன் துவங்கி உள்ளதால், வழக்கத்தை காட்டிலும் தற்போது அதிக அளவு வாழை இலைகள் தேவைப்படுகிறது. தேவை அதிகரிப்பு இருந்தும் வாழை இலை கிடைக்காத நிலை இருப்பதால் வாழை இலையின் விலை மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சராசரியாக டிபன் இலை ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில்,

தற்போது ஏழு முதல் எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். சாப்பாட்டு இலை எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்து ரூபாய் முதல் 11 ரூபாய் வரை விலை வைத்து விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் . இதுவே மொத்தமாக 500 இலை 1000 இலைகள் என அதிகளவு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வாழை இலைகளையே தர முடியாத நிலைதான் உள்ளது. வெகு விரைவில் இந்த நிலை சரியாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story