சந்தையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
திருப்பாச்சேத்தி சந்தையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
திருப்பாச்சேத்தி சந்தையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வாழைத்தார் விளைச்சல் சரிவையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கலியாந்தூர், அல்லிநகரம், மாரநாடு, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நாடு, ஒட்டு, ரஸ்தாளி ரகம் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே வாழை பயிரிடுகின்றன. ஏக்கருக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்கின்றனர். இதில் 90 சதவிகித கன்றுகள் விளைச்சலுக்கு வந்து விடும். பத்தாவது மாதத்தில் இருந்து பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை செய்யப்படுகிறது. சுழற்சி முறையில் வாழை இலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்படுகிறது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வாழை இலைகள், காய்கள், பழங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றிற்கு நல்ல விலை கிடைக்கும். கடந்தாண்டு பெய்த மழை காரணமாக பல இடங்களில் விளைச்சல் அதிகரித்ததால் முகூர்த்த நாட்கள் இருந்தும் வாழை இலை, காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வாழை மரங்களும் அழுக தொடங்கியது. 50 முதல் 60 காய்கள் கொண்ட ஒரு வாழைத்தார் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வாங்குவதற்கு கூட வியாபாரிகள் வராத நிலையில் விவசாயிகளே வேறு வழியின்றி அறுவடை செய்து மதுரை மார்கெட்டில் சென்று விற்பனை செய்து வந்தனர். கடந்த ஒரு வார காலமாக வாழை காய்கள் வரத்து பெருமளவு குறைந்ததால் விலை பன் மடங்கு உயர்ந்துள்ளது. 50 முதல் 60 காய்கள் கொண்ட ஒரு வாழைத்தார் 200 ரூபாய் வரை விற்பனையாகின்றன. திருப்பாச்சேத்தி வாழை மார்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்ததையடுத்து விலை உயர்ந்துள்ளது. ஒரு சில விவசாயிகளே வாழைத்தார் அறுவடையில் ஈடுபட்டிருப்பதால் வரத்து குறைந்துள்ளது. தினசரி 100 முதல் 300 வாழைத்தார்கள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 10 முதல் 30 வாழைத்தார்களே விற்பனையாகி வருகின்றன.
Next Story