பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என பனியன் தொழிற்சங்கத்தினர் கடிதம்

பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாஜக வையும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் என திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சங்கத்தினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறு குறு நிறுவனங்கள் முதல் ஏற்றுமதி நிறுவனங்கள் வரை செயல்பட்டு வரக்கூடிய திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்று அதற்கான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய தபால் நிலையத்திலிருந்து அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பாக திருப்பூரில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவன உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் 1952 ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ளாடை உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டி தரக்கூடிய அளவில் மிகப்பெரும் தொழில் நகரமாக திருப்பூர் வளர்ந்து வந்த நிலையில் , கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு தொழிலை இன்னும் மேம்படைய செய்யப் போவதாக உறுதி அளித்த நிலையில் அதற்கு மாறாக தவறான பொருளாதார கொள்கை மற்றும் கார்ப்பரேட் கொள்கைகள் காரணமாக ஜிஎஸ்டி , பணமதிப்பிழப்பு, ட்ரா பேக் குறைப்பு, பஞ்சநூல் விலை ஏற்றம் , பங்களாதேஷ் நாடுகளில் இருந்து துணி இறக்குமதி உள்ளிட்ட காரணமாக பின்னலாடை உற்பத்தி தொழில் மிகப்பெரும் சரிவை சந்தித்திருப்பதாகவும் , மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தொழில் நிலைமை மிகவும் மோசமடைந்து உரிமையாளர்கள் தொழிலாளர்களாக மாறக்கூடிய நிலை ஏற்படும்.

பாஜக அரசுடன் கூட்டணியில் இருந்த அதிமுக உதய் மின் திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் காரணமாக தற்போது மின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்திருப்பதன் காரணமாக பாஜகவையும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் எனவும் அதற்கு மாற்றாக இந்தியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story