வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணிகளை மாவட்டக் கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய அலுவலக வளாக கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (20.03.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் அனுப்பி வைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் பாலசுப்பிரமணியம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.