ஆனைவாரி முட்டல் நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை
ஆனைவாரி முட்டல் நீர் வீழ்ச்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியில் ஆனைவாரி முட்டல் ஏரி நீர்வீழ்ச்சி உள்ளது. மழைக்காலத்தில் ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வரும். அப்போது படகு சவாரி நடைபெறும். சுற்றுலா தலமான இந்த ஏரியில் படகு சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர் மழை காரணமாக நீர்வீழ்ச்சிக்கு மேலும் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிக்க தடை இந்த நிலையில் ஆனைவாரி முட்டல் ஏரி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஆத்தூர் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.