வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பீன்ஸ் விலை உயர்வு
பீன்ஸ் விலை
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் பீன்ஸ் விலை கிடு, கிடு வென உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை அதிகரிக்க தொடங்கியது. சில நாட்களாக விலை அதிகரித்து நேற்று ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. அதனால் காய்கறி வாங்க சென்ற பொதுமக்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்த விலை (ஒருகிலோ) விவரம் வருமாறு: ஒருகிலோ வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை, சின்னவெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை, பூண்டு ரூ.200 முதல் ரூ.300 வரை, தக்காளி ரூ.20-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.35 வரை, கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரை, அவரை ரூ.70 முதல் ரூ.80 வரை, சவ்சவ் ரூ.60 முதல் ரூ.70 வரை, பச்சை பட்டாணி ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டன.